என் மலர்
தமிழ்நாடு
ஒகேனக்கல்லில் 3 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து வந்தது.
- நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.
ஒகேனக்கல்:
கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
ஒகேனக்கல்லுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்தானது 11 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து வந்தது. இந்த நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதாலும் காவிரி நீர் பிடிப்பதில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 6500 கன அடியாகவும் சரிந்தது.
இந்த நீர் வரத்து குறைவால் கடந்த 3 நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.