search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Annamalai
    X

    இலங்கை கடற்படை அட்டூழியம்- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது.
    • மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ஒரு மீனவர் உயிரிழந்தார். 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மாயமான மற்றொரு மீனவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர்களது படகு மீன்பிடிக் கப்பல் ஒன்றின் மீது (IND-TN-10-MM-73) மோதியது.

    இந்த சம்பவத்தின் போது கப்பலில் இருந்த 4 மீனவர்களில் 1 மீனவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார், 1 மீனவர் தற்போது காணாமல் போயுள்ளார், மேலும் இரு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    சமீபகாலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. நேற்று நடந்த சோகமான சம்பவம், நமது மீனவர்களில் ஒருவரின் மரணம் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டது, உங்கள் தலையீட்டின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    காணாமல் போன தமிழக மீனவரை உடனடியாக கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வெளியுறவு அமைச்சகம் தலையீடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    முன்னதாக, இச்சம்பவம் குறித்து அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரர்களை அழைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


    Next Story
    ×