search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமாவளவனுக்கு அண்ணாமலை திடீர் பாராட்டு
    X

    திருமாவளவனுக்கு அண்ணாமலை திடீர் பாராட்டு

    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா.ஜனதா பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரம் தி.மு.க. கூட்டணியில் வலுவான கட்சியாக அங்கம் வகித்திருக்கும் திருமாவளவன் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அளவில் அரசியலில் இடம்பெற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இதன் காரணமாகவே தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேல் உள்ளிட்டோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு கருத்துக்களை கூட முன் வைத்தது உண்டு. அடிப்படையில் பார்த்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் பாடுபடுகிறார். இதற்கான முறைகளும், அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் பா.ஜனதாவும் இதையேதான் விரும்புகிறது.

    திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. மிக கடுமையாக விமர்சித்து கொள்கிறோம். ஆனால் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் தான் பயணிக்கிறோம்.

    பா.ஜனதாவில்கூட பட்டியல் இன தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களும் வட இந்தியாவில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் அவர்களை சொல்லவில்லை. திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது. இந்த நிலையில் திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதும் எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்று கூறி இருப்பதும் மறைமுகமாக திருமாவளவனுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் பா.ஜனதாவில் இந்த புதிய அணுகுமுறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

    Next Story
    ×