search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய மோட்டார் வாகன சட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தல்
    X

    புதிய மோட்டார் வாகன சட்டங்களை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தல்

    • வாகன ஓட்டிகள் தவறுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகையானது ஏதும் அறியாமல் அந்த வாகனத்தில்பயணம் செய்யும் பயணிகளுக்கும் விதிக்கப்படுகிறது.
    • தமிழக அரசு இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய மோட்டார் வாகனச் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அக்டோபர் 28 முதல் வாகன விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கடுமையான அபராதங்களை விதித்துள்ளது. அரசின் வருவாயை உயர்த்துவதற்காக மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இந்தச்சட்டம் தமிழகத்தையே சொல்லொண்ணா துயருக்கு ஆளாக்கியிருக்கிறது.

    வாகன ஓட்டிகள் தவறுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகையானது ஏதும் அறியாமல் அந்த வாகனத்தில்பயணம் செய்யும் பயணிகளுக்கும் விதிக்கப்படுகிறது.

    பொறியியல் படிப்பு, பட்டப்படிப்பு எனப்படித்த வர்கள் மாதம் 15,000 ரூபாயும், அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மாதம் 10,000 ரூபாயும் சம்பாதிப்பதே பெரியவிஷயம் எனப்போய்க்கொண்டிருக்கும் இன்றைய பொருளாதாரச் சூழலில் சம்பாதிக்கும் பணத்தை அபராதம் என்று பறித்துக்கொள்வது எந்த வகையில் நியாயம்.

    டாஸ்மாக் கடைகளையும் பார்களையும் நடத்தும் அரசு அதில் குடித்துவிட்டு பயணம் செய்யும் குடிகாரர்களை பாருக்கு சில அடி தூரத்திலேயே காவலர்களை வைத்து மடக்கி அவர்கள் மீது வழக்குப்போட்டு அபராதம் என்ற பெயரில் பணம் பறிப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

    விலைவாசி உயர்வால் தாங்கமுடியாத பொருளாதாரச் சுமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை அதிலிருந்து மீட்கும் தார்மீக கடமையுடைய அரசு, போக்குவரத்து காவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகையை டாஸ்மாக் கடைகளுக்கு விதித்திருப்பதைப்போல் டார்கெட்டாக விதித்து வழக்கு போட தூண்டுவதும் அபராதம் என்ற பெயரில் பணம் பறிப்பதும் அந்த டார்கெட்டை முடிக்காத காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதும் எந்த வகையில் மக்கள்நலச்சட்டம் என்று புரியவில்லை.

    வண்டிகளை பதிவு செய்யும்போது ரோட்டுவரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை வசூலிக்கும் அரசு முறையான சாலைவசதியைக் கூட அமைத்துத்தராமல், அபராதம் வசூலிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது சரியல்ல. பிடிபடும் வாகன உரிமையாளர்கள் பிடித்தவரிடமே வண்டியை விட்டுவிட்டு செல்வது போன்ற சம்பவங்களை தினந்தோறும் பார்க்கும்போது மனதுக்கு வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக அரசு இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு புதிய மோட்டார் வாகனச் சட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×