என் மலர்
தமிழ்நாடு

அக்டோபர் இறுதியில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்- அமைச்சர் பொன்முடி தகவல்

- கல்லூரிகளை தேர்வு செய்த 14,153 பேர் 10-ந் தேதிக்குள் சேர வேண்டும்.
- மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க 10 பேர் நியமிக்கப்பட்டு டெலிபோன் வழியாக தினமும் பேசி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 10,351 பேர் பணம் கட்டி கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.
2-வது சுற்று நடந்து வருகிறது. கல்லூரிகளை தேர்வு செய்த 14,153 பேர் 10-ந் தேதிக்குள் சேர வேண்டும். 5016 மாணவர்கள் பொறியியல் சேவை மையங்களுக்கு சென்று சேர வேண்டும். மேல் நோக்கி நகர்வுக்காக 4289 பேர் காத்திருக்கின்றனர்.
3-வது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 13-ந்தேதி தொடங்கும். பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க 10 பேர் நியமிக்கப்பட்டு டெலிபோன் வழியாக தினமும் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பி.ஆர்க் கல்லூரிகள் 44 உள்ளன. இதற்கான தர வரிசை பட்டியல் வருகிற 5-ந்தேதி வெளியிடப்படும். 8-ந்தேதி கவுன்சிலிங் நடைபெறும்.
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்பு 4-ம் சுற்று முடிந்து அக்டோபர் இறுதியில் தொடங்கும். நீட் தேர்வு முடிவு தாமதமாக வந்ததால் கலந்தாய்வு தள்ளிப்போனது.
கடந்த வருடங்களை போல இல்லாமல் அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலி இடங்கள் இருக்காது. அனைத்து இடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்வது குறித்து சமீபத்தில் பொன்முடி ஓசிப்பயணம் என்று குறிப்பிட்டார். அதுகுறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் 'ஓசி பயணம் குறித்து நான் விளையாட்டாக பேசியது பெரிதாக்கப்பட்டு விட்டது. அது தேவையில்லாதது' என விளக்கம் அளித்தார்.