search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடையும்
    X

    திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடையும்

    • திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது.
    • திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து ரேணிகுண்டா வரை,124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக அமைகிறது. இந்த சாலை அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு அப்போது ரூ. 571 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.

    சென்னை பாடியில் இருந்து, திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்துார் - ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இரு வழிச்சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.

    திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் இரும்பு தொழிற்சாலை அருகில், இணைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளாக முடங்கியது.

    இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடத்தில், சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன.

    பெரும்பாக்கம், காக்களூர், தண்ணீர்குளம், ஈக்காடு ஏரிகளில் சாலை அமைக்க, பொதுப்பணித் துறை அனுமதி பெறப்பட்டது.

    இதில் நீர்வழிச்சாலையில் 3 பெரிய மேம்பாலம், 12 சிறிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது. இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை பணி மேற்பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:-

    திருவள்ளூரில் இருந்து, திருநின்றவூர் வரை, நான்கு ஏரிகளில் பொதுப்பணித் துறை அனுமதிக்காக காத்திருந்தோம். தற்போது நிர்வாக அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏரியில் எங்களுக்கு அளந்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில், குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட திருநின்றவூர் வரை 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த இடங்களில் தற்போது, மேம்பால துாண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×