என் மலர்
தமிழ்நாடு
பருவமழை தீவிரம்: தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
- தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
உள்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இன்று ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். அது எந்த திசைநோக்கி நகரும் என்பதை பொறுத்து தான் தமிழகத்தில் கனமழை வாய்ப்பை கணக்கிட முடியும்.
புதிய புயல் சின்னம் சென்னை அருகே மையம் கொண்டால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரியில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.
எனவே அடுத்து வரும் நாட்களில் பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.