search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    125 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    125 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    • வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • மொத்தம் 1937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை-உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை எந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    வேளாண்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அவ்வகையில், இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இந்நாள்வரை வேளாண்மை உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, பல்வேறு வகையான தொழில் நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 1714 நபர்களுக்கும், பணிக் காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 223 நபர்களுக்கும், என மொத்தம் 1937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கும், பணிக் காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 42 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 நபர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முதன்மைச் செயலாளர் பிரகாஷ்,தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமார வேல்பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×