search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
    X

    அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

    • அரசின் பங்களிப்பு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
    • மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி ஐ.டிசி. சோழா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    மத்திய அரசின் நிதியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வகுப்பறைகள் கட்டுவதுடன், தமிழக அரசும் ரூ.800 கோடி நிதி ஒதுக்கி அரசுப் பள்ளிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்ட அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்த நிலையில், அரசின் பங்களிப்பு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 'நம்ம ஸ்கூல்' என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று உயர்ந்த நிலைக்கு வந்த மாணவ-மாணவிகள், தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்கள், தொழிற்சாலைகளை நிறுவியவர்கள், சமூக அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்கள் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றையும் இந்த திட்டத்தின் கீழ் இணைத்து அவர்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி என்னும் சி.எஸ்.ஆர். நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    மேற்கண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நபர்கள், தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளனர்.

    அதில் பள்ளி சுற்றுச்சுவர், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், கணினிகள், சுகாதாரமான கழிப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் உருவாக்குதல், நூலகங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.

    இந்த மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி ஐ.டிசி. சோழா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த இணைய தளத்தில் இணைந்து பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான தங்கள் விருப்பங்களை தெரிவிக்கலாம். அவர்கள் வழங்கும் பணம் குறிப்பிட்ட அந்த பணிக்கு முறையாக செலவிடப்படுகிறதா? என்பதையும் இந்த இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

    இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லாஉஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×