என் மலர்
தமிழ்நாடு
26 மாவட்டங்களில் பூ மாலை வணிக வளாகங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- “நெட்டே நெட்டே பனை மரமே” என்ற தலைப்பிலான காலப்பேழை புத்தகம் தயாரிக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வெளியிட்டார்.
- “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணைய முகப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 26 மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்களை திறந்து வைத்தார்.
மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார்.
பனைமரத்தின் சிறப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையிலும், பனையின் சிறப்பினைப் போற்றும் வகையிலும், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பனைமரங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் கள ஆய்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட செய்திகளை உள்ளடக்கிய "நெட்டே நெட்டே பனை மரமே" என்ற தலைப்பிலான காலப்பேழை புத்தகம் தயாரிக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் வெளியிட்டார்.
திருவள்ளூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 3 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு உள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கடலூர், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 34 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்,
2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் வேப்பூரில் ஒரு புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறந்த சமூக சேவகரான "பாலம்" பா.கலியாண சுந்தரம் சமூக சேவையை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என்.நகர் திட்டப் பகுதியில் வீடு ஒன்றினை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் கலந்து கொண்டனர்.
விவசாய தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள "தமிழ் மண்வளம்" எனும் புதிய இணைய முகப்பினை (http://tnagriculture.in/mannvalam) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.