search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    X

    தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    • கோவையில் கடந்த 11 நாட்களில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • சுகாதார மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்ததால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை 24 மணி நேரமும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதனால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன.

    திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. நேற்று புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் ஒருவருக்கும், அறந்தாங்கி பகுதி மேற்பனைக்காடு குளமங்கலம் வடக்கு தெரு, எழில் நகர், பூவை ஆகிய பகுதிகளில் 5 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கோவையில் கடந்த 11 நாட்களில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிலர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிகிறது. அவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

    மதுரையில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது. அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் தெப்பக்குளம், சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும், நேற்று 3 பேருக்கும் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதுவரை மொத்தம் 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி சோதனை முடிவுகளின் அடிப்படையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என தெரிகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள சுகாதார மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை அரசு பொது மருத்துவமனையில் 26 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். இந்தநிலையில் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர், முள்ளுக்குடி, ராமச்சந்திரபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகமாக இருந்து வந்தது. அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தலைமை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் வார்டுகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் தனி வார்டுகளில் காய்ச்சல் அறிகுறி ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    மேலும் சிகிச்சை பெற்று வரும் 26 நபர்களும் நலமுடன் இருப்பதாக கும்பகோணம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.

    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக 14 பெண்கள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் காய்ச்சலால் 300க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    டெங்கு சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அடுத்த அல்லிகுழி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் டெங்குவால் 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×