என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சென்னை, புறநகர் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை சென்னை, புறநகர் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2022/08/31/1754500-ambathur.jpg)
சென்னை, புறநகர் பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர்.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை எப்போதும் போல கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெற்றது.
இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் பல்வேறு பொதுநல அமைப்பினரும் தெருக்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் இன்று களை கட்டி காணப்பட்டது. விதவிதமான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்று வீடுகளில் வைத்து வழிபட்டனர்.
சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெரிய விநாயகர் கோவில்கள் முதல் சிறிய விநாயகர் கோவில்கள் வரையில் அனைத்து கோவில்களிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விநாயகர் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது. சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பக்தர்கள் கொழுக்கட்டை படைத்து விநாயகரை மனமுருகி வழிபட்டனர்.
இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல்வேறு அமைப்பினர் சென்னையில் 2500க்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சூளை பட்டாளம், வியாசர்பாடி, கொளத்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்பினர் வழிபட்டனர்.
பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் சுமார் 15 அடியில் நரசிம்மா தாங்கும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பாரத் இந்து முன்னணி சார்பில் நிறுவன தலைவர் பிரபு, துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளூவர் நகர் நாகாத்தம்மன் கோவில் 4 வழிசாலை சந்திப்பில் சிக்கல் தீர்க்கும் சிங்கார விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர். இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சவுகார்பேட்டையை சேர்ந்த கணேஷ் மோட்சவ் மண்டல் என்ற அமைப்பின் சார்பில் அங்குள்ள பெரிய நாயக்கன் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
மதுரவாயல் மார்க்கெட் சந்திப்பில் இந்து முன்னணி மத்திய கமிட்டி தலைவர் சுப்ரமணி ரெட்டியார் ஏற்பாட்டில் உலக செஸ் போட்டி சென்னையில் நடந்ததை நினைவுபடுத்தும் வகையில் விநாயகரும் முருகரும் செஸ் விளையாடுவது போன்றும் அதனை சிவன் பார்வதி பார்வையிடு வது போன்றும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகர், ஆவடி மற்றும் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் இன்று விநாயகர் சிலைகளுக்கு செய்ய பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
அதிகாலையிலேயே எழுந்து பெண்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். கோயம்பேடு, புரசைவாக்கம், பாரிமுனை, தி.நகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வணிக பகுதிகளில் சாலையோர கடைகள் அதிக அளவில் காணப்பட்டன.
இந்த கடைகளில் விநாயகர் சிலைகள் மற்றும் சிறிய குடைகள், பூஜை பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையும் இன்று காலையில் சூடு பிடித்தி ருந்ததை காண முடிந்தது. சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் திடீர் வியாபாரிகளாக மாறி இருந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வருகிற 4-ந் தேதி ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.