என் மலர்
தமிழ்நாடு
தே.மு.தி.க. பொதுக்குழு-செயற்குழு சென்னையில் நாளை கூடுகிறது: கூட்டணி பற்றி முக்கிய முடிவு
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தது.
- விஜயகாந்தை நேரில் பார்ப்பதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னை:
தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தது. அப்போது அ.தி.மு.க.வும் அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில் தே.மு.தி.க. யாருடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறது? என்பது பற்றியும் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 405 பேரும், செயற்குழு உறுப்பினர்கள் 162 பேரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் தவிர மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என மொத்தம் 2,500 நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் தான் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில்தான் அவரது தலைமையிலேயே தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்தை நேரில் பார்ப்பதற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
கூட்டம் நடைபெற உள்ள திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண மண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது.