search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தே.மு.தி.க. இனி தேறுமா?- பாராளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைப்போம் என்கிறார்கள் நிர்வாகிகள்
    X

    தே.மு.தி.க. இனி தேறுமா?- பாராளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைப்போம் என்கிறார்கள் நிர்வாகிகள்

    • விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார்.
    • தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர்.

    சென்னை :

    சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் அதிரடி காட்டியவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எதிராக அரசியல் களத்தில் கலக்கிய விஜயகாந்த், கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியை ருசித்த நிலையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் கணிசமான வாக்குகளை அள்ளினார்கள்.

    முதல் தேர்தலிலேயே (2006-ம் ஆண்டு) 10 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலையும் (2009-ம் ஆண்டில்) தனித்தே சந்தித்தார். இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. பெருவாரியான ஓட்டுகளை பெற்றது. 9-ல் இருந்து 10 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலிலும் கிடைத்தன.

    இப்படி சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய விஜயகாந்த் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுடன் தான் எனது கூட்டணி என்றே கூறி வந்தார். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்முறையாக விஜயகாந்தும் கூட்டணி அரசியலுக்குள் தன்னை புகுத்திக்கொண்டார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. இப்படி 3 தேர்தல்களில் வெற்றிக் கொடியை நாட்டிய தே.மு.தி.க.வுக்கு 2016-ல் இருந்து இறங்கு முகமே. முதல்- அமைச்சர் ஆசையுடன் மக்கள் நல கூட்டணியில் போய் சேர்ந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. கூட்டணியிலேயே விஜயகாந்த் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜயகாந்தின் இந்த முடிவு மீண்டும் அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமைந்தது.

    ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். இந்த தேர்தலில் விஜயகாந்தின் ஓட்டு சதவீதம் 2.4 சதவீதமாக சரிந்தது. பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் இதுவரை தே.மு.தி.க 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.

    2009-ல் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டிய நிலையில் 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.வுக்கு தோல்வியே கிடைத்தது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தோற்ற தே.மு.தி.க கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தோற்றுப்போனது.

    இப்படி தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் மண்ணை கவ்விய தே.மு.தி.க., 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது எம்.பி. கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே தற்போது கட்சியை வழி நடத்தி வருகிறார். தொடர் தோல்விகளால் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்ந்து போய் பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டம் பிடித்துவிட்டனர். ஆனாலும் மனம் தளராத பிரேமலதா, தே.மு.தி.க. மக்கள் செல்வாக்குடனேயே உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக அது தொடங்கப்பட்டதோ அந்த இடத்தை அடைந்தே தீரும் என்று தொடர்ந்து மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அடித்து கூறுகிறார் தே.மு.தி.க. மூத்த நிர்வாகி ஒருவர்.

    தற்போதைய சூழலில் தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பதே பெரிய விசயமாக உள்ளதே?

    கட்சிக்குள் பழைய உற்சாகம் இல்லையே?

    இப்படி இருக்கும் போது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக இருந்தாலும் வெற்றிபெறுவது சாத்தியமா? என்பது போன்ற கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். இதற்கு பதில் அளித்து அந்த நிர்வாகி கூறியதாவது:-

    தே.மு.தி.க.வில் தற்போதுதான் உள்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். கட்சியை கீழ்மட்டத்தில் வலுப்படுத்தும் எண்ணத்திலேயே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதன்மூலம் தே.மு.தி.க.வுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளரான பிரேமலதா, கேப்டனையும் கவனித்துக்கொண்டு கட்சியை சரியான திசையில் வழி நடத்தி சென்று கொண்டிருக்கிறார். இளைய கேப்டன் என்று அழைக்கப்படும் தலைவரின் மகன் விஜய பிரபாகரன் எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் விஜய பிரபாகரனும் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

    கேப்டன் ஆசைப்பட்டபடி தே.மு.தி.க.வை ஆட்சி கட்டிலில் அமரச் செய்துவிட வேண்டும் என்பதில் பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் உறுதியாக உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தே.மு.தி.க. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதே இல்லை.

    வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தீவிரமாக உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெறும். கூட்டணி பலத்துடன் தே.மு.தி.க. வெற்றிபெற்று பாராளு மன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்துவைக்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு நம்பிக்கையுடன் பேசிய தே.மு.தி.க. நிர்வாகி, விஜயகாந்தின் உடல்நிலையை தேர்தலுக்குள் சரிசெய்து அவரை பிரசார களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது சாத்தியமா? என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார்.

    விஜயகாந்துக்கு பேச்சு சரியாக வரவில்லை. நிற்பதற்கும் முடியவில்லை. இந்த இரண்டு பிரச்சினைகளையும் தேர்தலுக்குள் சரிசெய்துவிட முடியும் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர். தே.மு.தி.க. தொண்டர்களும் அந்த நாளுக்காகவே காத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது கட்சியினருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருக்கும் என்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பெறப்போகும் வெற்றி எங்கள் கட்சிக்கு 2-வது வெற்றி இன்னிங்சாக இருக்கும் என்றே தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில் அரசியல் நோக்கர்களோ... தே.மு.தி.க. இனி தேறுமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

    விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சரியாக இல்லாத நிலையில் அந்த கட்சி எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்பதே தெரியவில்லை. திசை தெரியாமல் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் போலவே அந்த கட்சி உள்ளது. அது கரை சேருமா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

    தொடர் தோல்விகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தே.மு.தி.க.வுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களம் மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது என்பதும் அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

    காமெடி நடிகர் விவேக் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்று சொல்லிக்கொள்ளும் நிலையிலேயே தே.மு.தி.க. உள்ளது என்பதே தற்போதைய சூழலில் மறுக்க முடியாத உண்மையாகும்.

    Next Story
    ×