search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்வு: வணிகம்-தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதம் அதிகரிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்வு: வணிகம்-தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதம் அதிகரிப்பு

    • ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என நுகர்வோர்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலம் தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    மேலும் ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தினசரி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.885 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள், தொழிற்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் கிடைக்கிறது.

    ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-ம் அரையாண்டு என நுகர்வோர்களிடம் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் 80 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வணிக கட்டிடங்களுக்கு இந்த கட்டணம் மாறுபடும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க விரிவாக்க பகுதிகளில் வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது.

    கடந்த 2019-20-ம் ஆண்டு வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் 5 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    இந்த நிலையில் 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5 சதவீதமும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 10 சதவீதமும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஆண்டுதோறும் இதே சதவீதத்தில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணமாக மாதம் ரூ.80 வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி ரூ.84 வசூலிக்கப்படும். வீடுகளுக்கு லாரி குடிநீர் கட்டணத்தை பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் ரூ.475-க்கு வழங்கப்பட்டு வருகிறது. அது இனி ரூ.499 ஆக அதிகரிக்கும்.

    வணிக நிறுவனங்களுக்கு லாரி குடிநீர் 6 ஆயிரம் லிட்டர் ரூ.700-க்கு வழங்கப்பட்டு வந்தது. இனி அது ரூ.770 ஆக அதிகரிக்கும்.

    Next Story
    ×