என் மலர்
தமிழ்நாடு
துரைப்பாக்கத்தில் குடியிருப்புகள் அருகே ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி
- கடந்த 2011-ம் ஆண்டு வரை இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
- குடிநீர் தொட்டி அமைந்து உள்ள இடம் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன.
திருவான்மியூர்:
துரைப்பாக்கம் அடுத்த ஒக்கியம்துரைப்பாக்கம், ராஜு நகரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. பயன்பாட்டில் இல்லாத இந்த குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
ஆனால் இந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிகை எடுக்காமல் உள்ளனர். பொதுமக்கள் இந்த குடிநீர் தொட்டி அருகே செல்லாமல் இருக்க அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 20 அடி உயரத்துக்கு இரும்பு தகடுகள் வைக்கப்பட்டு உள்ளன.
எனினும் குடிநீர் தொட்டி உள்ள இடம் அருகே வாகனங்கள் செல்லும் முக்கிய சாலை, குடியிருப்புகள், கடைகள் உள்ளன. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையோரத்தில் இடிந்து விழும் நிலையில் நிற்கும் இந்த ஆபத்தான குடிநீர் தொட்டியை முற்றிலும் இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, துரைப்பாக்கம் ஊராட்சியாக இருந்த போது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பின்னர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாறியதும் சென்னை மெட்ரோ வாட்டரின் கட்டுப்பாட்டில் வந்தது.கடந்த 2011-ம் ஆண்டு வரை இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் தொட்டியின் தூண்கள் பெயர்ந்து, சிமெண்டுகள் பலம் இழந்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இப்போது வெறும்காட்சி பொருளாகவே காணப்படுகிறது.
இந்த குடிநீர் தொட்டியின் பின்புறம் மார்க்கெட், அருகில் கட்டிடங்கள், வாகனங்கள் அதிகம் செல்லும் சாலை உள்ளன. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் தொட்டி அமைந்து உள்ள இடம் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன. இந்த இடம் மெட்ரோ வாட்டருக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை. இந்த பகுதியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் கட்ட திட்டமிட்டுள்ளோம். விரைவில் குடிநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.