என் மலர்
தமிழ்நாடு
ஆத்தூரில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
- ஆத்தூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் சுமார் 13 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதுவே, அ.தி.மு.க. ஆட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.
குறைவான தூய்மைப் பணியாளர்களால், தூய்மைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. நகரம் முழுவதும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.
நரசிங்கபுரம் நகராட்சிக்கு தனியாக கட்டிடம் கட்டுவதற்கு அம்மா ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 28 மாதங்களுக்குப் பிறகும் இன்னும் நிதி ஒதுக்கி, நகராட்சிக்கு தனியாக அலுவலகக் கட்டிடம் கட்டப்படவில்லை.
தெரு விளக்குகள் எப்போதும் எரிவதில்லை. புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை. தற்போது, ஆத்தூர் நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக, விழுப்புரம் நகராட்சி ஆணையரை தி.மு.க. அரசு நியமித்து உள்ளது.
சேலம் மாவட்டத்தில் பல நகராட்சிகள் இருந்தும், 2 மாவட்டங்கள் கடந்து தொலைவில் உள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையரை நியமித்துள்ளது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். இதனால், ஆத்தூர் நகராட்சி ஆணையரை பொதுமக்கள் பார்ப்பது என்பது எளிதான காரியமன்று.
அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட எனது ஆட்சியில், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசிஷ்ட நதியை சுத்தப்படுத்தும் அற்புதமான திட்டத்தை, இந்த தி.மு.க. அரசு கடந்த 28 மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளது.
அதேபோல், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராசிபுரம் மற்றும் பெரம்பலூர் சாலையை இணைக்கும் உள்வட்டச் சாலை அமைக்கும் திட்டத்தையும் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது.
ஆத்தூர் தலைமை மருத்துவமனைக்கு, நோயாளிகளின் வசதிக்காக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது, ஆத்தூர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை; நோயாளிகளுக்கு போதிய மருந்துகளும் வழங்கப்படுவதில்லை.
ஆத்தூர் புதுப்பேட்டை-பெரம்பலூர் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 10 கோடி ரூபாய் அம்மாவின் அரசில் ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 28 மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் ஒப்பந்தமே கோரப்படவில்லை.
ஆத்தூர் நகராட்சிக்கு ஆணையர் இல்லை; பொறியாளர் இல்லை; பணி மேற்பார்வையாளர் இல்லை; நகர அமைப்பு அலுவலர் இல்லை; பணி ஆய்வாளர் இல்லை; வருவாய் ஆய்வாளர் இல்லை. இதன் காரணமாக, அனைத்து முக்கிய பணியிடங்களும் நீண்ட நாட்களாக காலியாகவே உள்ளது. இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், தமிழ்நாட்டிலேயே முக்கிய அதிகாரிகள் இல்லாமல் தடுமாறும் நகராட்சி ஆத்தூர் நகராட்சி. ஆத்தூர் நகர மக்கள் தங்கள் குறைகளை எங்கே சென்று சொல்லுவது என்பதுகூட புரியாமல் உள்ளனர்.
இதே போன்று, தமிழகத்தில் உள்ள மற்ற நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தரமற்ற பழுதான சாலைகள், பழுதடைந்த மின் விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, போதுமான எண்ணிக்கையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலை ஆகியவற்றை இந்த தி.மு.க. அரசு விரைவில் நிவர்த்தி செய்யாதபட்சத்தில், அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் அவல நிலைமைக்குக் காரணமான தி.மு.க. அரசையும்; அமைச்சர் கே.என். நேருவையும் கண்டித்தும்; நகராட்சிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 7.9.2023 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.