search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    Edappadi Palaniswami
    X

    தி.மு.க. அரசு முறைகேடுகளை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    • ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சுமார் 1138 கல்வி நிறுவனங்களில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    • தென் மாவட்டங்களில் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொலைதூர வட மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும். மாணவ, மாணவியர் விடுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. மாணவியர் விடுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும். நிதி உதவி ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    ஈமச் சடங்கிற்கான நிதி உதவி 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5ஆயிரமாக ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ், 2020-2021-ம் ஆண்டில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 800 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.265 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

    இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அம்மாவின் அரசு செயல்படுத்திய திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    ஆனால், 41 மாத கால ஸ்டாலினின் தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேலாண்மை கழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 90-க்கும் மேற்பட்ட மாவட்ட மேலாளர், துணை மேலாளர், உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற பணியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம், வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அல்லது அரசு விதிமுறைப்படி நியமிக்காமல், நேரடியாக நியமனம் செய்து அவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையற் கூடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து உணவுகள் விடுதிகளுக்கு எடுத்துச் செல்லும் முறையை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் சாமான்ய மக்களின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சுமார் 1138 கல்வி நிறுவனங்களில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    தற்போது இப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப திட்டமிட்டு உள்ளதாகவும், இதன்மூலம் திராவிட மாடல் அரசின் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொலைதூர வட மாவட்டங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படுவதால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் தி.மு.க. அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    குறிப்பாக, பழங்குடியினர் நலத்துறையில், 'தொல்குடி' என்ற திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயில், பல பணிகளை செய்யாமலேயே, செய்ததாகச் சொல்லி பலகோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஆதிதிராவிடர்களின் சம்பந்தி நான் என்று மறைந்த தி.மு.க. தலைவர் வாயளவில் அடிக்கடி கூறுவார். அதுபோலவே அவரது வழித் தோன்றலாக பரம்பரை ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினின் 41 மாத கால தி.மு.க. ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடையாமல் உள்ளதற்கும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கும் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனியாவது பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×