என் மலர்
தமிழ்நாடு
அ.தி.மு.க. இளைஞர்கள் அண்ணாமலை பக்கம் திரும்புவதை தடுக்க தீவிரம்: நிர்வாகிகளுடன் விவாதிக்கிறார் பழனிசாமி
- பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை மூலம் மக்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- வருகிற 21-ந்தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியை பலப்படுத்துவது, மக்கள் ஆதரவை திரட்டுவது போன்ற பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.-பா.ஜனதா இடையேயான உறவு முறிந்தது. அதன் பிறகு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை மூலம் மக்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது யாத்திரைக்கு பெருமளவில் கூட்டம் திரளுவது தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளன.
இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் நிருபர்களிடம் கூறும்போது, அண்ணாமலை யாத்திரையில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கொளுத்தி போட்டார்.
இது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யோசிக்க வைத்தது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் வெளியேறுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்.
இது தொடர்பாக வருகிற 21-ந்தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
கூட்டத்தில் மேலும் மகளிர் பிரிவு மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வாக்குச் சாவடிகளுக்கான குழுக்கள் அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
2024 பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் அதீத சக்தியாக உருவெடுக்கும் நோக்கில், அ.தி.மு.க.வின் இமேஜை புதுப்பித்து, மதச்சார்பற்ற தகுதியை மீட்டெடுத்து, அ.தி.மு.க.வை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே பழனிசாமியின் திட்டமாக இருக்கிறது.
2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் கைகோர்த்ததால் வெளியேறிய சிறுபான்மை வாக்காளர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக உள்ளது. பா.ஜ.க. கூட்டணியை விரும்பும் மனநிலையில் அ.தி.மு.க.வில் உள்ளவர்கள், என்.டி.ஏ.வில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பழனிசாமிக்கு ஏற்கனவே அழுத்தம் கொடுத்தனர்.
கூட்டணியில் இருந்த போது அ.தி.மு.க.வின் அடையாளங்களான அண்ணாதுரை, ஜெயலலிதா போன்றவர்களை விமர்சித்த அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூட கூட்டணி உடைந்த பிறகு அ.தி.மு.க.வை பற்றித் தவறாகப் பேசவில்லை.
எனவே உறவு முறிந்த பிறகு, பா.ஜ.க. அல்லது அ.தி.மு.க. தலைவர்கள் கடந்த காலத்தை எடுத்துரைத்து ஒருவரை ஒருவர் விமர்சிக்க முன்வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. பக்கம் சாய்வார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதே பாணியில், அண்ணாமலையின் அணி வகுப்பில் பா.ம.க.வினர் பங்கேற்பதாகக் கூறப்படுவது, குறிப்பாக யாத்திரை வன்னியர் மண்டலத்தை நெருங்கியதில் இருந்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் நடந்த கூட்டத்தில் கோவில்களுக்கு அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்றுவது குறித்து சமீபத்தில் அண்ணாமலை கூறியதற்கு அன்புமணி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
21-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் இளைஞர்களை தக்க வைப்பதோடு அவர்களை கவரவும் வியூகங்கள் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.