என் மலர்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை...
- எம்.ஜி.ஆரின் மீதுள்ள பற்றால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி இணைத்துக்கொண்டார்.
- ஆரம்பகாலத்தில் அவர் வசிக்கும் கிராமத்தின் அ.தி.மு.க கிளைக்கழக செயலாளர் முதல், மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகளுக்கு படிப்படியாக உயர்ந்தார்.
எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தால் உருவான இயக்கம் அ.தி.மு.க.
எம்.ஜி.ஆருக்கு பின்னர் அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழி நடத்தினார். அதன்பிறகு அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வழிநடத்தினார்கள்.
இந்த சூழலில் அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுப்பெற்றதன் விளைவாக அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதற்கிடையே ஒற்றைத்தலைமையாக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே கடும் போட்டி உருவானது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி உள்ளார்.
1954-ம் ஆண்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்த கருப்ப கவுண்டர்-தவசாயி அம்மாள் ஆகியோரின் இளைய மகன்தான் எடப்பாடி பழனிசாமி.
பள்ளிக்கூடப் படிப்பை முடித்த பிறகு, ஈரோடு வாசவி கல்லூரியில் விலங்கியல் இளமறிவியல் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிப்பு முடித்த பிறகு, வெல்ல கமிஷன் வியாபாரத்தில் ஈடுபட்டார் பழனிசாமி. ஆனால், அரசியல் ஆர்வம் அவரை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது.
எம்.ஜி.ஆரின் மீதுள்ள பற்றால், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பகாலத்தில் அவர் வசிக்கும் கிராமத்தின் அ.தி.மு.க கிளைக்கழக செயலாளர் முதல், மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் என பல்வேறு கட்சி பதவிகளுக்கு படிப்படியாக உயர்ந்தார். அரசியல் வாழ்க்கைக்கு தொடக்கமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த அவருக்கு கோணேரிபட்டி கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
1983-ல் ஒன்றிய இணை செயலாளராகவும், அ.தி.மு.க.வில் பதவி வகித்தார். அவரது தீவிரமான கட்சிப்பணியால் 1989-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தார்.
மீண்டும் 1991-ல் வெற்றி, 1996-ல் தோல்வி, 1999-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி, 2006-ல் தோல்வி என வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக சந்தித்தார். தோல்விகளால் துவழாத அவர் முன்னைவிட வேகமாக கட்சிப்பணியில் ஈடுபட்டார்.
அவருக்கு 2011-ல் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியது. அதில் வெற்றிபெற்று நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆனார். 2016- ல் மீண்டும் வெற்றி கிடைக்க மறுபடியும் அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்தது. எடப்பாடி சட்டசபைத் தொகுதியிலிருந்து அவர் 1989, 1991, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குபின் 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில், ஜெயலலிதா அணி வேட்பாளராக சேவல் சின்னத்தில், எடப்பாடி சட்டமன்றத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவருக்கு வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. இந்த காலகட்டத்தில், அ.தி.மு.கவின் சக்திவாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட நால்வர் குழுவிலும் இடம்பெற்றார் எடப்பாடி பழனிசாமி. 2016-ல் மீண்டும் வெற்றிபெற்று அமைச்சர் ஆனார். தொடர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துவந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய எடப்பாடி கே. பழனிசாமி மெல்ல மெல்ல தன்னை வலுப்படுத்திக் கொண்டதோடு, அ.தி.மு.க. அரசு நிலைத்திருக்க செய்ய வேண்டியவைகளை செய்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா மீதான அதிருப்தியால் தனியாக செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பை இணைத்துக்கொண்டதோடு, டி.டி.வி. தினகரன் பக்கம் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்ய வைத்தார். பிறகு நடந்த இடைத்தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான அளவு சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறவும் செய்தவர், தேர்தல் நெருங்கியபோது அ.தி.மு.கவின் அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் தன்னை அறிவிக்கச் செய்தார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியல் களத்தில் இடைவெளியை நிரப்பிவிட்டு காணாமல்போகும் சாதாரண அரசியல்வாதி அல்ல அவர் என்பதை, தனது கடந்த கால செயல்களின் மூலம் நிரூபித்திருக்கிறார் எடப்பாடி கே. பழனிசாமி.
விவசாயம், மக்கள் சேவை என பன்முகத்தன்மை கொண்ட எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து 48 ஆண்டுகளை கடந்துவிட்டன. குடும்பத்துடன் அழகான கிராம சூழலில் தொடக்கத்தில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் பணிகளுக்கு ஏதுவாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது குடிமராமத்து திட்டம், எளிமையான அணுகுமுறை பலவாறு கட்சியினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு கட்சியை தயார்படுத்துவது போன்ற சவாலான பணிகளை முன்னெடுத்து செயல்படும் கூடுதல் பொறுப்பும், கடமையும் உருவாகி இருக்கிறது. மக்கள் சேவையில் முதன்மைபெற்றது போன்று கட்சிப்பணியிலும் முத்திரை பதிப்பாரா? என்பது அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.