search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் வெற்றி- ஓ.பி.எஸ். அணிக்கு சோதனை மேல் சோதனை
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் வெற்றி- ஓ.பி.எஸ். அணிக்கு சோதனை மேல் சோதனை

    • ஓ.பி.எஸ்.சின் சட்டப் போராட்டங்களை வென்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாக அதிகாரமிக்க பதவியில் இன்று அமர்ந்திருக்கிறார்.
    • ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடந்து வந்த நீயா? நானா? போட்டியில் எடப்பாடி பழனிசாமி அணி தொடர் வெற்றி பாதையில் பயணித்து வருவது இன்றைய ஐகோர்ட்டு உத்தரவின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது.

    அதேநேரத்தில் ஓ.பி.எஸ். அணிக்கு சோதனை மேல் சோதனையாக எடப்பாடியின் தொடர் வெற்றி அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்து உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது. இதன் பின்னர் கடந்த 9 மாதங்களாக ஓ.பி.எஸ்.சும் அவரது அணி னரும் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே வந்தனர்.

    ஜூன் மாதம் கடைசியில் இருந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பி.எஸ். அணியினர் குரல் கொடுக்க தொடங்கி விட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதுபோன்று தொடர்ச்சியாக நடந்து வந்த சட்ட போராட்டங்களில் வென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இன்று வாகை சூடிக்கொண்டிருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். இடையே இதுவரை நடந்து வந்த சட்ட யுத்தத்தை திரும்பி பார்ப்போம்.

    கடந்த ஆண்டு ஜூன்-22: ஜூன் மாதம் 23-ந்தேதி தேர்தல் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் ஐகோர்ட்டில் மனுதாக்கல். ஆனால் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோர்ட்டு மறுப்பு. நிபந்தனையுடன் பொதுக்குழுவுக்கு அனுமதி.

    ஜூன்-23: வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்கள் நிராகரிப்பு. ஜூலை 11-ல் புதிய தீர்மானங்களுடன் பொதுக்குழு நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவிப்பு.

    ஜூலை-11: ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.

    ஜூலை-29: பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ். முறையீடு. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை ஐகோர்ட்டுக்கு மாற்றி விரைந்து முடிக்க உத்தரவு.

    ஆகஸ்ட்-3: பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வலியுறுத்தி தலைமை நீதிபதியிடம் ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு.

    ஆகஸ்ட்-5: வேறு நீதிபதியை நியமிக்க வசதியாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழு வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

    ஆகஸ்ட்-6: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

    ஆகஸ்ட்-11: எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

    ஆகஸ்ட்-17: ஜூலை 11-ல் நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி உத்தரவு. ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்தார். (ஓ.பி.எஸ். அணியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்).

    ஆகஸ்ட்-18: தனிநீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

    ஆகஸ்ட்-25: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு தேதி குறிப்பிடாமல் எடப்பாடி தொடர்ந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

    செப்டம்பர்-2: ஜூலை 11 -ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என 2 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு உத்தரவு. (எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாக கொண்டாட்டம்).

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பல கட்டங்களாக விசாரணை நடத்தியது. கடந்த 6 மாதங்களாக நடந்த இந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தது.

    பிப்ரவரி-23: அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்தனர்.

    வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

    ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனுதாக்கல்.

    இந்த வழக்குகள் மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்து வந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மட்டும் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என மீண்டும் ஓ.பி.எஸ். அணி மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த ஐகோர்ட்டு ஓ.பி.எஸ். தரப்பு மனுக்கள் அனைத்தையும் இன்று தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    மார்ச்-28: இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இப்படி ஓ.பி.எஸ்.சின் சட்டப் போராட்டங்களை வென்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமையாக அதிகாரமிக்க பதவியில் இன்று அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதேநேரத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு இது கடும் பின்னடைவாக மாறி இருக்கிறது. இதன்மூலம் அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    Next Story
    ×