என் மலர்
தமிழ்நாடு

மக்கள் மீது தி.மு.க. அரசு மும்முனை தாக்குதல் நடத்துகிறது- ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேச்சு

- சிங்கார சென்னையில் மக்கள் நடமாட முடியாதபடி சாலைகள் மரண பள்ளங்களாக மாறி உள்ளன.
- டெல்டா பகுதியில் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் விவசாயிகளுக்கு 11 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்க அரசுக்கு மனம் இல்லாதது வேதனை அளிக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என்று மும்முனை தாக்குதலை மக்கள் மீது ஏவி விட்டு உள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் நிலைகுலைந்த மக்கள் மீது அரசின் இந்த நடவடிக்கை பேரிடியாக விழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சுமை மீது சுமையை ஏற்றி வருகிறது. இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
சிங்கார சென்னையில் மக்கள் நடமாட முடியாதபடி சாலைகள் மரண பள்ளங்களாக மாறி உள்ளன.
டெல்டா பகுதியில் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் விவசாயிகளுக்கு 11 நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்க அரசுக்கு மனம் இல்லாதது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சக்தி வடிவேல், துணைத் தலைவர்கள் விடியல் சேகர், ஜவகர் பாபு, ராஜன் எம்.பி. நாதன், திருவேங்கடம், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பி.ஜீ.சாக்கோ, அருண்குமார், பாலா, ரவிச்சந்திரன், சத்ய நாராயணன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என். அசோகன் மற்றும் ராணி, சைதை நாகராஜன், வினோபா, ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, ஆர்.கே.நகர் செல்வகுமார், வி.எம்.அரவணன், வளசை உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.