search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே மேடையில் கவர்னர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: இருவரும் சுமூகமாக பேசுவார்களா? என எதிர்பார்ப்பு
    X

    ஒரே மேடையில் கவர்னர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: இருவரும் சுமூகமாக பேசுவார்களா? என எதிர்பார்ப்பு

    • கவர்னரின் செயல்பாடு தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    • சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் கவர்னரை கண்டித்து வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சில நிர்வாக பிரச்சினைகளில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்கள் மீது கவர்னர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காமல் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

    கடந்த ஜனவரி மாதம் கவர்னர் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்திய போது சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும் சில வார்த்தைகளை சேர்த்து வாசித்தார்.

    இதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரைதான் சபை குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதை பார்த்த கவர்னர் ஆர்.என்.ரவி பாதியிலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பிரச்சினைக்கு பின்னர் கவர்னர் அளித்த குடியரசு தின தேனீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்று சகஜமாக பேசிக் கொண்டனர்.

    இதன் பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சட்டசபையில் அந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி அனுப்பினார்.

    இதன் பிறகும் கவர்னர் அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதுடன் அது தொடர்பான கருத்துக்களையும் வெளியிட்டார்.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

    கவர்னரின் செயல்பாடு தி.மு.க. கூட்டணி கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் கவர்னரை கண்டித்து வருகிற 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னைக்கு இன்று மதியம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செல்கிறார்கள்.

    இருவரும் அருகருகே நின்று பிரதமரை வரவேற்க இருப்பதால் அப்போது பரஸ்பரமாக பேசிக்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் சென்ட்ரல் ரெயில் நிலையம், விவேகானந்தர் இல்லம், பல்லாவரம் அரசு திட்டங்களின் தொடக்க விழா கூட்டத்திலும் பிரதமர், கவர்னருடன், முதலமைச்சரும் பங்கேற்கிறார்.

    பல்லாவரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கான மேடையில் பிரதமருக்கு வலது புறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடது புறம் கவர்னர் ஆர்.என்.ரவி அமர்வதற்கு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்த மேடையிலும் இருவரும் சுமூகமாக பேசிக்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சிக்கும் இருவரும் செல்கின்றனர். அப்போதும் சகஜமாக பேசிக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×