search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனி, பெரியகுளத்தில் இடைவிடாது 4 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழை
    X

    தேனி, பெரியகுளத்தில் இடைவிடாது 4 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழை

    • நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதே இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை இரவு 8 மணிவரை இடைவிடாது கொட்டிதீர்த்தது. தேனி வீரபாண்டி, அரண்மனைப்புதூர், வைகைஅணை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையினால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    பஸ் நிலையம் உள்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளநீரால் மூழ்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.

    பெரியகுளம், தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, காமக்காபட்டி மற்றும் கும்பக்கரை அருவி ஆகிய பகுதிகளில் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஏற்கனவே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    நேற்று பெய்த கனமழையின்போது கும்பக்கரை அருவியில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு செல்ல தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல சுருளிஅருவியிலும் தண்ணீர் அதிகளவு செல்வதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் பழைய ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் நேற்று இரவு ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. சில்வார்பட்டியில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதே இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரியகுளம் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்று வீட்டில் இருந்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றி தங்க வைத்தனர். இதேபோல் ஆண்டிபட்டி அருகில் உள்ள கீழபூசனத்து கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தேக்கடி 30.2, பெரியாறு 38, கூடலூர் 28.4, உத்தமபாளையம் 13.4, வீரபாண்டி 64.2, வைகை அணை 69.2, மஞ்சளாறு 63, சோத்துப்பாறை 25, ஆண்டிபட்டி 24, அரண்மனைப்புதூர் 127, போடி 25.6, பெரியகுளம் 91 மி.மீ மழையளவு பதிவானது.

    Next Story
    ×