என் மலர்
தமிழ்நாடு

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
- அதிகபட்சமாக செங்கோட்டையில் 43.4 மில்லி மீட்டரும், தென்காசியில் 42 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 35 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
- ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரியை தாண்டி கடும் வெயில் அடித்து வந்தது. அதிக வெப்பம் நிலவியதால் பகலில் சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாளை, வண்ணார்பேட்டை, மகிழ்ச்சி நகர், கிருஷ்ணாபுரம், கே.டி.சி. நகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட மாநகர பகுதிகள் மட்டுமின்றி மானூர், கீழ பாப்பாக்குடி, மன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்தது.
ஏர்வாடி பகுதியில் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.
எப்போதும் தண்ணீர் விழும் என்ற சிறப்பை பெற்ற அகஸ்தியர் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. அங்கு இன்று ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக செங்கோட்டையில் 43.4 மில்லி மீட்டரும், தென்காசியில் 42 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 35 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
இதே போல் ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இன்று காலை தென்காசி மாவட்டத்தில் வெயில் இன்றி மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குற்றாலத்தின் பிரதான அருவியான மெயினருவி, ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. இதே போல் பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்டவைகளிலும் குறைந்த அளவு தண்ணீர் விழுகிறது.
விடுமுறை தினமான நேற்று குற்றால அருவிகளில் அதிகரித்து காணப்பட்ட சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று குறைந்த அளவே இருந்தது.