என் மலர்
தமிழ்நாடு
திருப்பூர் மாநகரில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
- மழையின் காரணமாக திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிப்பாளையம் அருகே கோவை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
- திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவிநாசியில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
அவினாசி:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
இன்று காலை 6 மணிக்கு பிறகும் கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலையில் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவர்கள் நலன் கருதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைப்பணிகள் நடக்கிறது. இதற்காக சாலைகள் தோண்டி போடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் அந்த வழியாக செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
திருப்பூர் சக்தி தியேட்டர் அருகே வளம்பாலத்தை மூழ்கடித்தப்படி மழைநீர் சென்றதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திருப்பூர் மும்மூர்த்திநகரில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். செரீப் காலனி பகுதியிலும் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. டி.எம்.எப். பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. திருப்பூர் ஊத்துக்குளி மெயின்ரோடு, பி.என்.ரோடு, ஆகிய பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது.
மேலும் மழையின் காரணமாக திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிப்பாளையம் அருகே கோவை சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணிகள் 10 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அவிநாசியில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-44, கலெக்டர் முகாம் அலுவலகம் -79, திருப்பூர் தெற்கு -25, கலெக்டர் அலுவலகம்-50, அவினாசி -120, தாராபுரம்-3, நல்லதங்காள் ஓடை-5, காங்கயம்-5.40, , பல்லடம்-30. மாவட்டம் முழுவதும் மொத்தம் 381.40 மி.மீ., மழை பெய்துள்ளது.