என் மலர்
தமிழ்நாடு
தமிழக மேடைகளில் சிலம்பொலிக்காமல் செல்லப்பனார் இருந்தது இல்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் தமிழை விளைவித்த, ‘தமிழ் உழவர்’தான் நம்முடைய சிலம்பொலியார்.
- ஆயிரம் நூல்களுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்.
சென்னை:
நாமக்கல், சேந்தமங்கலம் சாலை, கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலியார் நகரில் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் சிலை மற்றும் அறிவகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து வாழ்நாளெல்லாம் தமிழை விளைவித்த, 'தமிழ் உழவர்'தான் நம்முடைய சிலம்பொலியார்.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக இவர் பணியாற்றிய போது, இயக்குநர் பதவிக்கு இவர் விண்ணப்பிக்கவில்லை. "ஏன் விண்ணப்பிக்கவில்லை" என்று கேட்டவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர். 1976-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, சிலம்பொலியாரைப் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பொறுப்பில் இருந்து தகுதி இறக்கம் செய்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்கியது அன்றைய கவர்னர் ஆட்சி.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை கவர்னர் ஆட்சி என்றால் இப்படித்தான் நிர்வாகம் தெரியாமல் நடந்துள்ளது. 1989-ம் ஆண்டு கழக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முதலமைச்சர் கலைஞர் நியமித்தார்.
பள்ளி ஆசிரியராக இருந்தாலும் - தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்தாலும் - தமிழ்நாட்டு மேடைகளில் சிலம்பொலிக்காமல் இருந்தது இல்லை செல்லப்பனார். பழங்காலப் புலவர்களைப் போலவே புலமைத் திறனும், சொல்லாட்சியும், அதேநேரத்தில் தமிழ் உரிமைக்காகப் போராடும் உணர்ச்சியும் ஒருங்கே பெற்றவர் நம்முடைய சிலம்பொலியார்.
* ஆயிரம் நூல்களுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார்.
* சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களைத் தொடர் சொற்பொழிவாக நடத்தியிருக்கிறார்.
* புலவர் குழந்தையின் புரட்சி இலக்கியமான ராவண காவியத்தைத் தொடர் சொற்பொழி வாற்றிய பெருமையும் இவருக்குத்தான் உண்டு.
* 55 ஆண்டுகளாக 4 ஆயிரம் இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்து உரையாற்றி இருக்கிறார்.
* எந்தப் பாடலைப் படித்தாலும் மனப்பாடமாக ஒப்பிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது.
* தனது நூலகத்தில் 10 ஆயிரம் புத்தகங்கள் வைத்திருந்தார்.
* இவர் அளவுக்கு இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் நடத்திய தமிழறிஞர்கள் இருக்க மாட்டார்கள். சிலம்பொலியாரிடம் அணிந்துரை வாங்குவது, தங்களது நூலுக்கு மகுடம் எனக் கருதி தமிழ் ஆராய்ச்சியாளர்கள் வாங்குவார்கள். தமிழ் இனிமையான மொழி என்பதை அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் போது உணரலாம். புரட்சிக் கவிஞரின் கவிதைகளை அவர் சொல்லும் போது உணர்ச்சி கொப்பளிக்கும்.
இத்தகைய பெருமைக்குரிய தமிழ் அடையாளமாக விளங்கும் சிலம்பொலியாருக்குச் சிலை அமைப்பது மிக மிக மகிழ்ச்சிக்குரியது. அதனை திறந்து வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.