என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ரூபே கார்டை ஏற்றுக்கொள்ள பல நாடுகளுடன் பேசி வருகிறோம்- அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேட்டி ரூபே கார்டை ஏற்றுக்கொள்ள பல நாடுகளுடன் பேசி வருகிறோம்- அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேட்டி](https://media.maalaimalar.com/h-upload/2022/10/12/1775454-nir.jpg)
ரூபே கார்டை ஏற்றுக்கொள்ள பல நாடுகளுடன் பேசி வருகிறோம்- அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேட்டி
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- இரு நாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
- கொரோனா தொற்று பின்னடைவுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது.
வாஷிங்டன்:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 6 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
சர்வதேச நிதி ஆணையம் (ஐ.எம்.எப்) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வாஷிங்டன் சென்றுள்ளார். நிர்மலா சீதாராமன் அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் எலனை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது அமெரிக்க நிதி மந்திரியை இந்தியா வருமாறு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
பின்னர் புருகிங்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஈஸ்வர் பிரசாத்துடனான உரையாடலின் போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக்கொள்ள அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதில் பணவீக்க பிரச்சினைகளை தீர்க்கும். பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரம் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று எரி சக்தியின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையில் உள்ள சிரமமாகும். மேலும் மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மற்றும் அவை கிடைப்பதில் உள்ள சிரமமும் பிரச்சினையாகும்.
நாட்டின் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகள் குறைவாகவே திருத்தப்பட்டுள்ளன.
பணப்பரிவர்த்தனையில் ரூபே கார்டை ஏற்றுக் கொள்ள பல நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது. ரூபே கார்டை ஏற்க சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
டிசம்பரில் ஜி20 ஆண்டு கூட்டத்துக்கு இந்தியா தலைமை ஏற்கும் நிலையில் உலகின் தலைசிறந்த 20 பொருளாதாரங்களின் வல்லுனர் குழுவானது உலக நலனை நோக்கி செயல்படும். முன்னேறிய நாடுகள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முடிவுகளின் உலகளாவிய கசிவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்காமல் இருக்க வேண்டும்.
கொரோனா தொற்று பின்னடைவுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடினமாக இருக்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றுவதாகும்., அதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை தயாராக உள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.