என் மலர்
தமிழ்நாடு
கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆகிறார்- பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாகிறது
- தி.மு.க. மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆகிறார்.
- இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. உள்கட்சி தேர்தலின் இறுதி கட்டமாக தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதில் தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதேபோல் பொதுச்செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
9-ந்தேதி கூடும் தி.மு.க. பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அப்போது துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட நியமன பதவிகளுக்கு யார்-யார் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரமும் வெளியிடப்படும்.
தற்போதைய சட்ட விதிகளின் படி 5 பேர் துணை பொதுச்செயலாளர்களாக இருக்கிறார்கள். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். அரசியலில் இருந்து விலகி கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
இதனால் மகளிருக்கான ஒதுக்கீட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக தி.மு.க. மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி. தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழிக்கு பதவி உயர்வு கிடைப்பதன் மூலம் கட்சியில் அவரது அந்தஸ்து மேலும் உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.