search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொளத்தூர்-நாதமுனி இடையே பாறைகள் நிறைந்த சவாலான இடத்தில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்குகிறது
    X

    கொளத்தூர்-நாதமுனி இடையே பாறைகள் நிறைந்த சவாலான இடத்தில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்குகிறது

    • மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • சுரங்கப்பாதை பணி முடிவடைய 3½ ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    கொளத்தூர்:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

    இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ. மாதவரம் பால்பண்ணை -சிறுசேரி சிப்காட் வரை 45.4கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில் மாதவரம் பால் பண்ணை-சிறுசேரி சிப்காட் வரை 19 உயர்நிலை பாதை ரெயில்நிலையங்கள், 28 சுரங்கப்பாதை நிலையங்கள், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரை 18 உயர்நிலை நிலையம், 9 சுரங்கப்பாதை நிலையங்கள், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 39 உயர்நிலை நிலையம், 6 சுரங்கப்பாதை நிலையங்கள் வருகின்றன.

    மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் மூலம் 2-வது கட்ட வழித்தடங்களில் சுரங்கப்பாதை பிரிவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இதில் கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான 5.8 கி.மீ நிலத்தடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. பாறைகளால் நிறைந்த பகுதி என அடையாளம் காணப்பட்டு உள்ளதால் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் மிகவும் சவாலான பகுதிஎன்று தெரிகிறது. இந்த சுரங்கப்பாதைக்கான ஒப்பந்தரர்கள் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே சவாலான இந்த வழித்தடத்தில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    இந்த சுரங்கப்பாதை பணி முடிவடைய 3½ ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கொளத்தூர் சந்திப்பு, சீனிவாசா நகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பஸ் நிலையம் மற்றும் நாதமுனி ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட உள்ளது. இப்பகுதியில் உள்ள மண், அண்ணா சாலையில் முதல் கட்ட பணியின்போது அடையாளம் காணப்பட்டதைப் போன்று உள்ளது. எனவே சுரங்கப்பாதை பணி சவாலாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×