search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பத்தூர் தொகுதியில் 9 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கப்படும்- சட்டசபையில் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
    X

    அம்பத்தூர் தொகுதியில் 9 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கப்படும்- சட்டசபையில் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

    • சென்னையில் 200 வார்டுகளில் 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • 191 வார்டுகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு 160 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டும் பணி தற்போது நிறைவடைய உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் பேசுகையில், "அம்பத்தூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க அரசு முன் வருமா?" என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "அம்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் ஆவடியிலும், 13 கி.மீ. தூரத்தில் கே.எம்.சி. மருத்துவமனையும் உள்ளது. இது தவிர இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி ஆஸ்பத்திரிகளும், மருந்தகங்களும் உள்ளன. எனவே அம்பத்தூரில் பொது மருத்துவமனை அமைக்க அவசியம் இல்லை" என்றார்.

    அப்போது ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ. வலியுறுத்தி கூறுகையில், "அம்பத்தூர் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். பெரிய மற்றும் சிறிய தொழில்பேட்டைகளும் பெரிய மற்றும் சிறய தொழில்பேட்டைகளும் உள்ளது.

    தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் போது சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அம்பத்தூர் தொகுதியில் பொது மருத்துவமனை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "முதலமைச்சர் ஏற்கனவே 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் 703 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 200 வார்டுகளில் 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 191 வார்டுகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு 160 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டும் பணி தற்போது நிறைவடைய உள்ளது. 160 டாக்டர்கள், 160 செவிலியர்கள், 160 மருத்துவ உதவியாளர்களை தேர்வு செய்யும் பணியும் நடக்கிறது.

    அம்பத்தூர் பகுதியில் பாடி, கொரட்டூர், அத்திப்பட்டு, மேனாம்பேடு, முகப்பேர் தெற்கு, முகப்பேர் கிழக்கு, ஒரகடம், வரதராஜபுரம், வெங்கடாபுரம் ஆகிய 9 இடங்களில் மருத்துவமனைகள் புதிதாக அமைய உள்ளது.

    சென்னையில் 170 சிறிய மருத்துவமனைகள், தமிழ்நாடு முழுவதும் 450 சிறிய மருத்துவமனைகள் என 600-க்கும் மேற்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என்றார்.

    இதற்கு ஜோசப் சாமு வேல் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×