என் மலர்
தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் வழங்கப்படுமா?- அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

- ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னையில் கூடுதலாக 4 வணிக வளாகங்களிலும் இந்த சிறப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
சென்னையை பொறுத்தவரை இதற்காக 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டிருக்கிறது. தலைமை செயலகத்திலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. இதுவரை 2.66 கோடி மின் இணைப்புகளில் 1.03 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
வருகிற 31-ந்தேதி வரை எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்று பார்க்கப்படும். அதன்பிறகு முதல்-அமைச்சரின் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று அவரது ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் முடிவு எடுத்து அனுமதி வழங்குவார்கள்.
31-ந்தேதிக்குள் இணைக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பதற்காக என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க வேண்டாம். எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக, மிக நேர்த்தியாக விரைவாக பணிகள் நடைபெறுகிறது.
25-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று ஒருநாள் மட்டும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இருக்காது. மீதி இருக்கும் விடுமுறை நாட்களிலும் இந்த பணிகள் தொடரும்.
தமிழகத்தில் நகர் பகுதிகளில் ஒரு கோட்டத்துக்கு 18200 மின் இணைப்புகள் இருக்க வேண்டும். கிராம பகுதிகளில் 140 மின்மாற்றிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பெரும்பாலான நகர்ப்புற கோட்டங்களில் 16 ஆயிரம் மின் இணைப்புகளும், கிராமப்புற கோட்டங்களில் 130 மின் மாற்றிகளும் உள்ளன.
தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில கோட்டங்களில் அதிகமாக இணைப்புகள் உள்ளன. எனவே அங்கு தொழிலாளர்களிடம் கருத்து கேட்டு அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஏற்ப புதிய கோட்டங்கள் தொடங்கப்படும்.
மின் வாரியத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் தொழிற் சங்கத்தை கேட்டுத்தான் செயல்பட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அவர்களின் கோரிக்கை சரியானதா என்று பார்க்கப்படும். பேச்சுவார்த்தை நடக்கும் போதே மின் ஊழியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல.
மின் வாரியத்தில் இருக்கும் கடனுக்கு வட்டி கட்டுவது என்பது குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் எந்தெந்த செலவினங்கள் கூடுதலாக இருந்தது. எதையெல்லாம் சீரமைக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு தான் மின் வாரியம் இந்த மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில்தான் ஆதார் எண் இணைக்கக் கூடிய பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஆதார் எண் இணைப்பால் ஏற்கனவே உள்ள மின் வினியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் அவர்களுக்கு எந்தவிதமான அச்சமும், பயமும் தேவையில்லை.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மின்துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.