என் மலர்
தமிழ்நாடு

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளிய அவலம்- குற்றச்சாட்டுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் விளக்கம்

- தொழிலாளர்களை மலம் அள்ளுவதற்கு நான் கட்டாயப்படுத்தவில்லை.
- என்னை பழி வாங்குவதற்காக தொழிலாளர்கள் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து அவதூறு பரப்புகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 15-வது வார்டில் உள்ள பொது கழிப்பறை அனைத்தும் பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து உள்ளது.
இதில் அப்பகுதி மக்கள் மலம் கழிக்க இடவசதி இல்லாததால், பொதுக் கழிப்பிடத்தில் அனைத்து பகுதிகளும் மலம் கழித்து உள்ளே நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி அசுத்தமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் 15-வது வார்டு பகுதியில் உள்ள கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி தொடங்கியது. அந்த பணிக்காக பழைய கழிவறையில் ஏற்கனவே உள்ள மலத்தை அள்ளுவதற்காக தூய்மை பணியாளர்கள் இருவரை பேரூராட்சி அலுவலர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்படி சொல்லும் பணியை செய்யாவிட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் தூய்மை பணியாளர்கள் மலத்தை கையால் அள்ளி அப்புறப்படுத்தியதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தங்கள் ஆதங்கத்தை தூய்மை பணியாளர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இது குறித்து மாரண்ட அள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி கூறியதாவது:-
தொழிலாளர்களை மலம் அள்ளுவதற்கு நான் கட்டாயப்படுத்தவில்லை. என்னை பழி வாங்குவதற்காக தொழிலாளர்கள் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து அவதூறு பரப்புகின்றனர்.
என்னை மிரட்டுவதற்காக அவர்களே சென்று கழிவுகளை அகற்றி அதனை படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் பொதுகழிப்பிடத்தை புதுப்பிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டவுடன் எங்களது பணி முடிவடைந்து விடுகிறது. அதில் நாங்கள் தூய்மை பணியாளர்களை பணியமர்த்துவதற்கான வேலை இல்லை.
அதனை புதுப்பிப்பது ஒப்பந்ததாரரின் வேலை. ஒருவேளை ஒப்பந்ததாரரிடம் இவர்கள் கூலிக்காக சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றிருந்தார்கள் என்றால் அது தவறு. அவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.