search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் 35 மீட்டர் ஆழத்தில் கட்டப்படுகிறது
    X

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் 35 மீட்டர் ஆழத்தில் கட்டப்படுகிறது

    • சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன.
    • மயிலாப்பூர் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித் தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும்.

    சென்னை:

    மயிலாப்பூரில் தரையில் இருந்து 115 அடி ஆழத்தில் 4 நிலைகளில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைய உள்ளது. அதாவது, 3 நடை மேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரெயில் நிலையமாக கட்டப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை விரைவில் தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்த திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (3-வதுவழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

    40-க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரெயில் நிலையம் அமையவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    மயிலாப்பூர் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித் தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். இங்கு பொதுத்தளம்,வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ்நடை மேடை என 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது.

    இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் எந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன் படுத்தப்பட உள்ளன. மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இந்த நிலையத்தில் 115 அடி (35 மீட்டர்), 78 அடி (24 மீட்டர்) மற்றும் 55 அடி (17 மீட்டர்) ஆழத்தில் 3 அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கான தளத்துடன் இந்த ரெயில் நிலையம் அமைய உள்ளது. மயிலாப்பூரில் போதிய நிலம் மற்றும் சாலை அகலம் இல்லாததால், ஆழமான ரெயில் நிலையமாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    சில ஆண்டுகளில் மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் திறக்கப்படும் போது, அது மிகப்பெரிய பொறியியல் அற்புதமாக இருக்கும்.

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில்நிலையத்தின் முதல் தளத்தில் (தரையிலிருந்து 55 அடி ஆழத்தில்) மாதவரம்-சிறுசேரி சிப்காட் செல்லும் மேல்தளப்பாதை ரெயில்களும், 2-ம் தளத்தில் (தரையிலிருந்து 78 அடியில்) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி செல்லும் ரெயில்களும், 3-ம் தளத்தில் (தரையிலிருந்து 115 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரெயில்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

    மயிலாப்பூர் (திருமயிலை) மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2 வழித்தடங்களை இணைக்கும் முக்கியமான நிலையமாக இருக்கும். இந்த நிலையம் தற்போதுள்ள ஆலந்தூர், சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல அமைக்க உள்ளோம். இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×