என் மலர்
தமிழ்நாடு
ஆவின் மூலம் காலாவதியான பொருட்கள் விற்பனை- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- ஆவின் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுக்கும், விற்பனைப் பிரிவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
- தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பாலகங்களும்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை அளிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமே, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம். ஆவின் பாலகங்கள் கேட்கும் பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்வதில்லை என்றும், குறைந்த அளவில் விற்பனையாகும் தயிர், நூடுல்ஸ், இனிப்பு வகைகள், பிஸ்கெட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகின்றன என்றும், இவற்றை கட்டாயம் வாங்க வேண்டும் என்று ஆவின் பாலகங்களை ஆவின் நிறுவனம் வற்புறுத்துகிறது என்றும், இந்தப் பொருட்கள் அனைத்தும் காலாவதி காலம் நெருங்கும் நேரத்தில் விநியோகிக்கப்படுகின்றன என்றும் பால் முகவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
இதற்குக் காரணம், ஆவின் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுக்கும், விற்பனைப் பிரிவுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. இது மட்டுமல்லாமல், மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, ஆவினுக்கு வருமானம் வந்தால்போதும் என்ற நிலையில் ஆவின் நிறுவனம் செயல்படுவது மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. திறமையற்ற அரசு தி.மு.க. அரசு என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையில்லை. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பாலகங்களும்தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.