என் மலர்
தமிழ்நாடு

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் ஆலோசனை

- தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஒன்றுபட்ட இயக்கமாக மாறவேண்டும் என தொண்டர்கள் விரும்பி வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முட்டுகட்டையாக உள்ளனர்.
பெரியகுளம்:
அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு இடமில்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார். இருந்தபோதும் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்டங்களில் தனக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் நியமித்து வருகிறார்.
இந்த நிர்வாகிகள் மூலம் விரைவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். குறிப்பாக கொங்குமண்டலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக தனது பண்ணை வீட்டில் சந்திக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளான ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம், தாராபுரம் நகர செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்திற்கு வந்தனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஒன்றுபட்ட இயக்கமாக மாறவேண்டும் என தொண்டர்கள் விரும்பி வருகின்றனர். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முட்டுகட்டையாக உள்ளனர். எனவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கட்சியை பலப்படுத்தி மீண்டும் அ.தி.மு.க ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மாவட்டந்தோறும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்.
தற்போது ஒற்றை தலைமை குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதால் அதன் முடிவை பொறுத்து எங்கள் தலைமையில் அ.தி.மு.க தொண்டர்களை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம் என்றனர்.