என் மலர்
தமிழ்நாடு
அ.தி.மு.க. ஒன்றுபடாமல் வெற்றி வாய்ப்பு இல்லை- ஓ.பன்னீர்செல்வம்
- 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது.
- பிற பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பத்திரிகை உலகில் அடித்தட்டு மக்கள் வரை சுலபமாக தமிழில் படிக்க ஆதித்தனார் ஆற்றிய பணி இன்றும் கிராமப்புறங்களில் பாமர மக்களால் பாராட்டப்படுகிறது. அவர் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும். அ.தி.மு.க.வில் பிரிந்து இருக்கக்கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள்தான்.
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று வாங்கி ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது. 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. பிற பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.
ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் இருக்கக்கூடியதற்கு தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான் காரணமாகும். தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட போது என்னை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஆறு பன்னீர் செல்வம் என்னுடன் நின்றார்கள்.
இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுயேச்சையாக நின்ற நான் 33 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறேன்.
தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.