search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பிரசாரம்
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பிரசாரம்

    • காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு இம்மாத இறுதிக்குள் தொகுதி உடன்பாடு மேற்கொள்ள தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • அமைச்சர் உதயநிதி 40 தொகுதிகளுக்கும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வார் என மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் 2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி பணிகளை துவக்கி விட்டது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் தி.மு.க. சார்பில் பி.எல்.2 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டலம் வாரியாக அழைத்து தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.

    இதன் அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி வீடு வீடாக திண்ணை பிரசாரம் செய்யும்படி கட்சியினருக்கு கட்டளையிட்டார். அந்த பிரசாரமும் துவங்கி விட்டது.

    தேர்தலுக்கான கட்சி பிரசாரத்தை தொடங்கி விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்கும் பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் ஆகிய கட்சிகளுடன் சுமூக உடன்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தி.மு.க.கூட்டணியில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இன்று உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

    காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு இம்மாத இறுதிக்குள் தொகுதி உடன்பாடு மேற்கொள்ள தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ந்தேதிக்குள் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    இதற்காக மண்டல வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது. டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை மண்டலம் என 5 மண்டலங்களுக்கும் சென்று பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, ஒரே மேடையில் அமர வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

    இதற்கான சுற்றுப் பயண திட்டம் தயாராகி வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்யும் அதே வேளையில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி 40 தொகுதிகளுக்கும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வார் என மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.

    பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தி.மு.க.வின் பிரசாரம் படு வேகமாக இருக்கும் என்றும் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயல்பாட்டை மக்களிடம் எடுத்து கூறுவதே பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×