என் மலர்
தமிழ்நாடு
பணபலம் உள்ளவர்களுக்கு தான் அரசு அதிகாரிகள் வேலை செய்கிறார்கள்- ஐகோர்ட்டு வேதனை
- பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
- ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர்.
சென்னை:
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி மற்றும் சாந்தி. இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்துக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் கடந்த ஆகஸ்டு மாதம் மனு கொடுத்தனர்.
இந்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்காததால், சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சீனிவாச ராவ் ஆஜராகி பட்டா கேட்டு மனுதாரர்கள் மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் பரிசீலிக்க வில்லை. எந்த பதிலும் சொல்வதில்லை. அதனால் இந்த வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலைக்கு மனுதாரர் தள்ளப்பட்டு உள்ளார் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி கொடுத்த மனுவை அதிகாரிகள் சட்டப்படி பரிசீளிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு தகுதி இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை 2 மாதத்திற்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் செய்து முடிக்க வேண்டும். பொதுவாக சாதாரண குடிமக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் பட்டா கேட்டும், பட்டா மாற்றத்திற்கும், நிலத்தை அளப்பதற்கும், மறு அளவீடு செய்வதற்கும், எல்லையை வரையறை செய்வதற்கும் பொதுமக்கள் ஐகோர்ட்டை நாட வேண்டியதுள்ளது. அதாவது, சிறு சிறு கோரிக்கைகளுக்காக பொது மக்கள், ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று சிறு உத்தரவை பெற வழக்கு தொடர வேண்டியதுள்ளது.
அரசு அதிகாரிகள் படைபலம், பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்களே தவிர சாதாரண குடிமக்களுக்கு வேலை செய்வது இல்லை என்று இந்த வழக்கு மூலம் தெளிவாகிறது.
சில நேரங்களில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருக்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்குத் தான் தெரியும். இந்த ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவர்கள் அரசு பிறப்பிக்கும் சுற்றறிக்கையை, ஐகோர்ட்டு உத்தரவை மதிக்கிறார்களா, பின்பற்றுகிறார்களா? என்பது கூட தெரியவில்லை. அதிகாரிகள் பணி செய்யாமல் இருப்பதை இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. எனவே இந்த உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும். அந்த உத்தரவை தலைமைச் செயலாளரும் பிற துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மக்கள் கொடுக்கும் இது போன்ற கோரிக்கை மனுக்களை காரணம் இல்லாமல் பரிசீலிக்காமல், நிலுவையில் வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பாவார்கள். வழக்கை முடித்து வைக்கிறேன்
இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்