என் மலர்
தமிழ்நாடு

வாட்ஸ்அப் மூலம் ரேசன் பொருள் விநியோகம் தகவலை தெரிவிக்கும் மாற்றுத்திறனாளி பணியாளர்- பொதுமக்கள் பாராட்டு

- கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.
- பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையின் விற்பனையாளராக மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த தகவலை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் குருவப்ப நாயக்கனூர் ரேஷன் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை நிறுவி உள்ளார்.
இதன் மூலமாக வார்டு வாரியாக பொருட்கள் வழங்கும் தகவல், என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது. கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.
இதன் காரணமாக முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூலித்தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு, காலநேர விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சரவணனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வாட்ஸ்-அப் குருப்பை உருவாக்கி தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் பொதுமக்களுக்கும் ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.