என் மலர்
தமிழ்நாடு

பெரியதச்சூர் லட்சுமி நாராயணா கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு

- போலீசார், சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள எசாலம் சாலையில் பிரசித்திப் பெற்ற லட்சுமி நாராயணா கோவில் உள்ளது. இக்கோவிலில் அதே ஊரைச் சேர்ந்த நரசிம்மன் (78), நடராஜன் (70) ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஐம்பொன்னாலான லட்சுமி நரசிம்மர், நடராஜர், பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய உற்சவர் சிலைகள் இருந்தன. விசேஷ நாட்களில் இந்த உற்சவர் சிலைகள் விதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்.
இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு அர்ச்சகர் நடராஜன் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 5.30 கோவிலை திறப்பதற்கு அர்ச்சகர் நரசிம்மன் வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்களுடன் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, உற்சவர் சிலைகள் திருட்டுபோயிருந்ததை கண்டனர். அதன்படி பெருமாள், லட்சுமி, ஆண்டாள் ஆகிய 3 உற்சவர் சிலைகள் திருட்டுபோயிருந்தது. மற்ற 2 உற்சவர்கள் மட்டும் கோவிலில் இருந்தது.
இதையடுத்து ஊர் பிரமுகர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் இந்து அறநிலையத் துறையினருக்கும், பெரியதச்சூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியதச்சூர் போலீசார், திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
கோவிலில் ஐம்பொன் உற்சவர் சிலைகள் உள்ளதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித் திருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளையும் பெரியதச்சூர் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். திருட்டுபோன 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு ரூ.30 லட்சம் என தெரிகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஊரின் நடுவில் உள்ள கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.