என் மலர்
தமிழ்நாடு
போலீஸ் நிலையம் கட்ட ஒதுக்கிய இடத்தில் வீடுகட்டிய நபர்
- சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
- இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது சிலமலை கிராமம். இங்கிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை அருகே ஜமீன் பைபாஸ் வண்டிப் பாதையில் சுமார் 34 சென்ட் நிலம் போடி சரக போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீண் உமேஷ் டோங்கரே தலையீட்டின் பேரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
மேலும் சிலமலை ஊராட்சி மன்ற கூட்டத்தில் போலீஸ்நிலையம் கட்டுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டுவதற்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு கூறி விண்ணப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சிலமலை அருகில் உள்ள ராணி மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை அருகே வசித்து வரும் கனகராஜ் என்பவர் போலீஸ் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 34 சென்ட் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு கட்டிடப் பணிகளை தொடங்கினார்.
அஸ்திவாரங்கள் தோண்டப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை எச்சரித்து பணியை நிறுத்துமாறு கூறினார். இதனால் சிறிது காலம் வேலையை நிறுத்திவிட்டு கனகராஜ் மீண்டும் வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
தற்போது அஸ்திவாரங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு சுவர் எழுப்பப்படும் நிலையில் தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகராஜிடம் வேலையை நிறுத்தும்படியும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
மேலும் அப்பகுதியை சர்வே செய்ததில் அப்பகுதியில் உள்ள 34 சென்ட் நிலம் சிட்டா அடங்கல் பட்டாவில் வண்டிப்பாதையாக குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதும் இந்த இடம் தனக்கு உரிமையானது என்று கூறிய கனகராஜ் வாதிட்டார். அதனையடுத்து ஆவணங்களை காட்டி இந்த இடம் உங்களுடையது இல்லை என கூறினார். மேலும் அப்பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து புதிதாக கட்டப்பட்ட சுவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கனகராஜ் தானே புதிதாக கட்டிய சுவர்களை அகற்றினார். அதன்பின் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.