search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எஜமானருடன் சிறப்பு வாகனத்தில் சுற்றி வரும் வளர்ப்பு நாய்: சாலையை வேடிக்கை பார்த்தபடி ஹாயாக செல்கிறது
    X

    எஜமானருடன் சிறப்பு வாகனத்தில் சுற்றி வரும் வளர்ப்பு நாய்: சாலையை வேடிக்கை பார்த்தபடி 'ஹாயாக' செல்கிறது

    • ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம்.
    • சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது.

    திருப்போரூர்:

    சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி. என்ஜினீயரான இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ஹரிக்கு வீட்டில் குட்டியில் இருந்தே வளர்த்து வரும் "ரூபி" என்ற நாய் மீது அதிக பாசம் உண்டு. வெளியூர் சென்றால் கூட நாயை உடன் அழைத்து சென்று வந்தார். ஒரு நாள் கூட ஹரியும், அவரது குடும்பத்தினரும் வளர்ப்பு நாயை விட்டு பிரியாமல் இருந்தனர்.

    இந்தநிலையில் ஹரி வார விடுமுறை தினமான ஞாயிற்றுகிழமையில் தனது மனைவி, மகளுடன் வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செல்வது வழக்கம். அப்போது அவர் தனது செல்லபிராணி ரூபியையும் சைக்கிளில் அழைத்துசென்று வருவது சவாலாக இருந்தது.

    கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இ.சி.ஆர். சாலையில் தனது சைக்கிளின் பின்பக்கம் அமரவைத்து அழைத்து செல்லும் ரூபி எங்கு கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுமோ என்று ஒவ்வொரு முறையும் பயந்தார்.

    இதையடுத்து இணையதளத்தில் ஜெர்மன் நாட்டு குறும்படம் ஒன்றில் அங்கு சைக்கிளிங் செய்பவர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வண்டியை சைக்கிளுடன் இணைத்து வளர்ப்பு நாயை சைக்கிளிங் அழைத்து செல்வதை ஹரி பார்த்தார். உடனடியாக அவர் ஆன்லைன் மூலம் ஜெர்மன் நாட்டில் இருந்து அந்த பிரத்யேக வாகனத்தை வரவழைத்தார். இதற்காக அவர் ரூ.25 ஆயிரம் செலவும் செய்து உள்ளார்.

    தற்போது ஹரி தனது வளர்ப்பு நாய் ரூபியை பிரத்யேக வாகனத்தில் அமர வைத்து அதனை தனது சைக்கிளில் பொருத்தி அழைத்து சென்று வருகிறார். அதில் சாலையில் செல்பவர்களை வேடிக்கை பார்த்த படி ரூபி ஹாயாக சென்று வருகிறது. இந்த சிறப்பு வாகனத்தில் மழை, வெயில் படாதவாறு தடுப்பும் உள்ளது. குடும்பத்தில் ஒருவர் போல் வளர்ப்பு நாயை பராமரித்து வரும் ஹரியின் பாசபிணைப்பினை பொதுமக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

    Next Story
    ×