என் மலர்
தமிழ்நாடு
காற்றாலை லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
- பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
- 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 26 சக்கரங்கள் கொண்ட 13 கனரக லாரிகள் வந்தன. இந்த லாரிகளால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில்,
தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மூலனூர், கன்னி வாடி மற்றும் குடிமங்கலம் ,கோவிந்தாபுரம், சத்திரம், குண்டடம், மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலான காற்றாடிகள் அமைக்கப்பட்டு வந்தது.
இப்பொழுது ஒரு காற்றாடி ரூ.8 கோடி முதல் 12 கோடி வரை பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது . ஆலைகளில் அமைக்கப்படும் காற்றாடி இறக்கைகள் மற்றும் உபகரணங்கள் 200 அடி நீளமுள்ள லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.
தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில் , பொன்னிவாடி செல்லும் சாலையானது 7 மீட்டர் கொண்ட சாலை ஆகும் .இதில் 6 மீட்டர் அகலமுள்ள லாரிகள் வருகின்றன. அதுவும் இந்த லாரிகளானது ஒவ்வொரு லாரியாக வராமல் தொடர்ச்சியாக 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவில் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மூலனூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.