search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க.-அ.தி.மு.க.வில் போட்டி போட்டு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு
    X

    தி.மு.க.-அ.தி.மு.க.வில் போட்டி போட்டு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு

    • சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
    • கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்-3-ந்தேதிக்குள் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்துவிட வேண்டும் என்று தி.மு.க. வினர் வீடு,வீடாக சென்று ஆட்களை சேர்த்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் அதிகளவு உறுப்பினர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா காலத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அவரே கூறி வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு ஏற்பட்டுள்ள சூழலில் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி. தினகரன் அணி, சசிகலா குரூப் என பிரிந்து நிற்கிறார்கள்.

    ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு அதி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளார்.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    அதன் அடிப்படையில் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் கழக கிளை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதேபோல் தி.மு.க.விலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க.வில் ஏற்கனவே 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க.வில் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து 234 தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்-3-ந்தேதிக்குள் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்துவிட வேண்டும் என்று தி.மு.க. வினர் வீடு,வீடாக சென்று ஆட்களை சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் ஒரே தெருவில் சென்று புதிய உறுப்பினர்களை சேர்ப்பதால் இரு கட்சியினர் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×