என் மலர்
தமிழ்நாடு

கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிப்பு
- சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
- சவுக்கு சங்கர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
கடலூர்:
நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக சமூக ஆர்வலர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் அவரை பார்ப்பதற்காக ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்ததாக கூறி பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
பார்வையாளர்களை அனுமதிக்ககோரி சவுக்குசங்கர் கடலூர் சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது சிறை அதிகாரிகள் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்குசங்கர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்குசங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே சவுக்குசங்கர் எந்த நேரத்திலும் விடுதலையாகலாம் என பேசப்பட்டது. ஆனால் இவர் மீது 4 வழக்குகள் இருந்ததால் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை நீதிமன்றத்தை அணுகினார். அப்போது 4 வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது.
ஆனால் ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததால் சவுக்குசங்கர் விடுதலையாவதில் தாமதம் ஆனது.
இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.