என் மலர்
தமிழ்நாடு
செந்தில் பாலாஜி விவகாரம்: கவர்னர் ரவி முடிவு என்ன? முதலமைச்சருக்கு கடிதம் எழுத வாய்ப்பு
- டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
- மூத்த வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியையும் சந்தித்து சுமார் 2 மணி நேரம் கவர்னர் ஆர்.என் ரவி கருத்துக்கள் கேட்டார்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் டிரைவர்-கண்டக்டர் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடுவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு பின்னர் வேலை வழங்காமல் பணம் மோசடி செய்த வழக்கு பல வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இன்று வரை அங்குதான் சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில் அவர் இலாகா இல்லாத மந்திரியாக நீடித்து வருகிறார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி முதலில் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.
கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சட்ட நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியின் முடிவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதுபற்றி அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா கவர்னர் ஆர்.என்.ரவியை தொடர்பு கொண்டு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டு அதன்படி செயல்படுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து கவர்னர் ரவி 5 மணி நேரத்துக்குள் தனது உத்தரவை நிறுத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்கும்படி உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருப்பதால் அவரிடம் கருத்து கேட்டிருப்பதாகவும் அடுத்த உத்தரவு வரும் வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 7-ந்தேதி இரவு டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேசினார். அதன் பிறகு மறுநாள் மூத்த வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியையும் சந்தித்து சுமார் 2 மணி நேரம் கருத்துக்கள் கேட்டார்.
அதன் பிறகு பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அவர் பிரான்ஸ் செல்ல இருந்ததால் சந்திக்கவில்லை.
இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி ஒருநாள் முன்னதாகவே நேற்றிரவு 8 மணிக்கு சென்னை திரும்பினார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முடிவை சட்ட ஆலோசனை பெறும் வரை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கவர்னர் தெரிவித்து இருந்ததால் இன்று இது தொடர்பாக தனது முடிவு என்ன? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டா? இல்லையா? என்பது இன்று தெரிந்து விடும்.