என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்ததால் 2,100 லாரிகளில் கூடுதலாக வினியோகம்
- அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.
சென்னை:
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.
சென்னையில் தினமும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 700 நடைகள் (டிரிப்) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அது ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 நடைகளாக உயர்ந்து உள்ளது. அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 20 லாரிகள் கூடுதலாக வாடகைக்கு அமைத்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்க முடியாத பகுதிகளில் டயல் செய்து ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி இருப்பதால் ஏராளமானவர்கள் இதன் வழியாக குடிநீருக்கு பதிவு செய்கின்றனர். பணம் செலுத்தி குடிநீர் பெறுவோர் பயன்பாடு கூடியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் உள்ளவர்கள் தொட்டியில் குடிநீரை சேமித்து வைத்து கொள்கின்றனர்.
மேலும், மார்ச் மாதத்தில் தெருக்களில் உள்ள தொட்டிகளை நிரப்ப 61 ஆயிரம் நடைகள் பயன்படுத்தப்பட்டன. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த லாரி டிரிப்புகள் 24,800 ஆக அதிகரித்துள்ளது.
இதே போல டயல் குடிநீர் தேவை 30 ஆயிரம் நடைகளை உயர்ந்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு லாரிகளின் டிரிப்புகளை அதிகரித்துள்ளது. தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
டேங்கர் லாரிகளின் பயணங்களை அதிகரிப்ப தன் மூலம் தனியார் தண்ணீர் டேங்கர் சப்ளையர்களின் ஆதிக்கத்தை மறைமுகமாக குறைத்து வருகிறோம்.
புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி மக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நம்பி உள்ளனர். அவர்களுக்கும் 'டயல்' குடிநீர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.