என் மலர்
தமிழ்நாடு

தமிழர் பாரம்பரிய கலையில் ஆர்வம்: கரகாட்டம் பயிற்சி பெறும் சென்னை திருநங்கைகள்

- தமிழர் பாரம்பரிய கலையை வளர்க்கும் விதமாக சென்னை திருநங்கைகள் கரகாட்டம் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- சென்னையில் திருநங்கைகள் ஆட்டோ, கார் ஓட்டவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழர் பாரம்பரிய கலையை வளர்க்கும் விதமாக சென்னை திருநங்கைகள் கரகாட்டம் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவிகள் செய்து வருகின்றன. திருநங்கைகள் சுய தொழில்களில் ஈடுபட்டு சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
ராயபேட்டையில் முதல் முறையாக டீக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டையில் டிபன் கடை நடத்தி திருநங்கைகள் அசத்தி வருகிறார்கள். மேலும் தோழிஅமைப்பின் மூலம் 40 திருநங்கைகள் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரத நாட்டிய கலையையும் கற்க தொடங்கினார்கள். மேலும் வாகன ஓட்டுனர், டிரைவர் தொழிலில் ஈடுடுபட கார், ஆட்டோ ஓட்டும் பயிற்சியும் பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழர் பாரம்பரிய கலையை வளர்க்கும் விதமாக தற்போது கரகாட்டம் பயிற்சியை சென்னை திருநங்கைகள் கற்று வருகிறார்கள். இதற்காக 10 திருநங்கைகள் தீவிர கரகாட்ட பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தலையில் கும்பம் வைத்து தீவிர கரகாட்டக் கலையை கற்று வருகிறார்கள். இது குறித்து தோழி அமைப்பு நிர்வாகி சுதா கூறியதாவது:-
திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக 'தோழி' அமைப்பு செயல்பட்டு வருகிறது. திருநங்கைகள் டீக்கடை, அரிசி கடை அமைத்து வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள்.
சென்னையில் திருநங்கைகள் ஆட்டோ, கார் ஓட்டவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு பரத நாட்டிய பயிற்சியும் அளிக்கப்படு உள்ளது.
தற்போது திருநங்கைகளுக்கு கரகாட்டம் ஆடும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருநங்கைகள் பல்வேறு வகையில் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் செல்ல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.