search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 6-வது நாளாக மழை நீடிப்பு: குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்
    X

    சென்னையில் 6-வது நாளாக மழை நீடிப்பு: குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்

    • மின்சார வாரியம் சார்பில் கேபிள்களை புதை வடத்தில் கொண்டு செல்லும் பணிகளும் நடக்கிறது.
    • கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்வதற்காக மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. மேலும் மின்சார வாரியம் சார்பில் கேபிள்களை புதை வடத்தில் கொண்டு செல்லும் பணிகளும் நடக்கிறது.

    இந்த பணிகள் முடிந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க வார்டுக்கு ரூ.5 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு ரூ.10 கோடியை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது. அதன்படி சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. சென்னையில் கடந்த 31-ந்தேதி முதல் கன மழை தொடங்கியது. நேற்று முன்தினம் வரை கன மழை நீடித்தது. கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் 6-வது நாளாக மழை நீடிப்பதால் பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    குறிப்பாக தி.நகர் திருமலை சாலை, அண்ணா நகர் சாந்தி காலனி, 13-வது மெயின் ரோடு மற்றும் உட்புற சாலைகள், திருமங்கலம் மேம்பாலம் கீழே உள்ள சர்வீஸ் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

    திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் பல இடங்கள் பள்ளம் மேடாக காட்சி அளிக்கிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையும் மிகவும் மோசமாக காணப்படுகின்றன.

    மாதவரம் ரவுண்டானா முதல் நல்லூர் சுங்கச் சாவடி வரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட சாலை திட்டத்துக்காக பல ஆண்டுகளாக புதுபிக்கப்படாமல் உள்ளது. இதனால் குண்டும் குழியுமாக மாறியுள்ள இந்த சாலையில் கன ரக வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன.

    சாலையில் இருக்கும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில் அதில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திலும் சிக்குகிறார்கள்.

    மேலும் பல சாலைகளில் மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து காணப்படுகின்றது. இதனாலும் விபத்துக்கள் ஏற்படுகிறது.

    அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2,160 சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்தது. அந்த சாலைகளில் 6,100 குழி, பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆய்வு மூலம் அதிகாரிகளுக்கு தெரிந்தது.

    இதையடுத்து சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால் சாலைகள் மேலும் சேதம் அடைந்துள்ளன.

    குண்டும் குழியுமான சாலைகள் 3 விதமான முறையில் சரி செய்யப்படுகிறது.

    கான்கிரீட் முறையிலும், உலர் தார்கலவை மற்றும் காய்ந்த ஜல்லி ஆகியவற்றால் பள்ளங்கள் நிரப்பப்படுகின்றன. இதுவரையில் 5,400 பள்ளங்கள் சிமெண்ட் கலவை மூலம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளன. அதாவது 49 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு குழிகள் மூடப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×